உலக கிண்ண கிரிக்கெட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றியை பெற்ற அவுஸ்திரேலியா!
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 399 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வார்னர் 104 ஓட்டங்களையும், கிளென் மேக்ஸ்வெல் 106 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 71 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
நெதர்லாந்து அணி சார்பில் பந்து வீச்சில் லோகன் வான் பீக் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 400 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 21 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பாரிய தோல்வியடைந்தது.
நெதர்லாந்து அணி சார்பில் விக்ரம்ஜித் சிங் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அவுஸ்திரேலியா அணி சார்பில் பந்து வீச்சில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.