சஸ்காட்செவான் மாகாணத்தில் பறவைக் காய்ச்சல் பரவல்!
கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தில் உள்ள பல வர்த்தக ரீதியற்ற பண்ணைகள் மற்றும் மூஸ் ஜோ நகரில் இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற கோழிக் கண்காட்சி ஒன்றில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கனடிய உணவுப் பரிசோதனை முகவரகம் அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 7ஆம் திகதி மூஸ் ஜோவில் நடைபெற்ற கோழிக் கண்காட்சியுடன் தொடர்புடைய தீவிரமான பறவைக் காய்ச்சல் தொற்று பதிவாகியுள்ளதாக கனடிய உணவுப் பரிசோதனை முகவரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சஸ்காட்செவான் கோழி வளர்ப்பாளர் சங்கம் வெள்ளிக்கிழமை இது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளது.

குறித்த கண்காட்சியில் பறவைகளைக் காட்சிப்படுத்தியவர்கள், விற்பனை செய்தவர்கள் அல்லது கொள்வனவு செய்தவர்கள் உடனடியாக 1-403-338-5225 என்ற CFIA-இன் நோய்வாய்ப்பட்ட பறவைகளுக்கான அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பறவைகளை வாங்கவோ விற்கவோ இல்லாமல் கண்காட்சியில் மட்டும் கலந்துகொண்டவர்களும், தங்களது வீடுகளில் வளர்க்கும் பறவைகளுக்கு நோய் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை அவதானிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் 2 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகளை வெளிப்படுத்தக்கூடியது எனவும், ஏனைய பறவைகளுக்கும் மிக விரைவாகப் பரவக்கூடியது எனவும் கனடிய உணவுப் பரிசோதனை முகவரகம் தெரிவித்துள்ளது.
சோர்வுநிலை மற்றும் பசியின்மை, கண்கள் வீங்குதல் மற்றும் சுவாசக் கோளாறுகள், முட்டை உற்பத்தி குறைதல் அல்லது திடீர் மரணம் போன்ற அறிகுறிகள் பறவைகளிடம் தென்பட்டால் அவதானமாக இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களில் மொத்தமாக எத்தனை பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தோ அல்லது நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தோ இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.