இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட கடுமையான போர்! 49 இராணுவ வீரர்கள் பலி
சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து வந்த இரு நாடுகளான அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது.
6 வாரங்கள் நடைபெற்ற இந்த போரில் ஆர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சர்ச்சைக்குரிய நாக்ரோனா - கராபாக் மாகாணத்தை அசர்பைஜான் கைப்பற்றியது.
அந்த போரில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு நாடுகளுக்கு இடையேயான போர் ரஷ்யாவின் தலையீட்டையடுத்து முடிவுக்கு வந்தது.
போர் முடிவுக்கு வந்த போதும் அசர்பைஜான் - ஆர்மீனியா இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அசர்பைஜான் - ஆர்மீனியா நாடுகளின் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மோதல் வெடித்தது.
இருநாட்டு ராணுவத்தினரும் துப்பாக்கியால் சுட்டும், பீரங்கி குண்டுகளை வீசியும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டனர். இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனிடையே அசர்பைஜான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டு வீரர்கள் 49 பேர் பலியானதாகவும், இதற்கு தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் ஆர்மீனியா பிரதமர் நிகோல் பாஷினியன் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
அதே சமயம் இந்த மோதல் குறித்து அசர்பைஜான் தரப்பில் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.