நேபாளத்தில் பனிச்சரிவு விபத்தில் – கனேடியர் உட்பட ஏழு பேர் பலி
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான பனிச்சரிவு (Avalanche) விபத்தில், ஒரு கனேடியர் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக கனடாவின் வெளிநாட்டு அலுவலம் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து கூடுதல் தகவல்களை பெற முயற்சி செய்து வருகிறோம் என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தனியுரிமை காரணங்களால் மேலும் விவரங்களை வெளியிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பனிச்சரிவு, மவுண்ட் யாலுங் ரி (Mount Yalung Ri) மலைச்சிகரத்தின் அடிவார முகாமை (Base Camp) தாக்கியது. இது சுமார் 4,900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்துக்குப் பின்னர், கடுமையான பனிச்சரிவும் புயலான வானிலையும் காரணமாக மீட்புப் பணியாளர்கள் அன்றே அந்த இடத்தை அடைய முடியவில்லை.
ஆனால், செவ்வாய்க்கிழமை வானிலை தெளிந்ததைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்புக் குழு அங்கு இறங்கியது.
பனிச்சரிவில் காயமடைந்த எட்டு பேர் தலைநகர் காத்மாண்டுவுக்கு (Kathmandu) விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை மூன்று உடல்கள் பனிப்பாறைகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.