வயிற்றில் கட்டி என நினைத்து மருத்துவமனை சென்ற பெண் ; 5 மணி நேரத்தில் பிறந்த குழந்தை
பிரித்தானியாவில் வயிற்றில் கட்டி இருப்பதாகக் கருதி மருத்துவமனைக்குச் சென்ற 41 வயதான பெண்ணுக்கு, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்த ஐந்து மணி நேரத்திலேயே குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த சாமி ஈவான்ஸ் (41) என்ற பெண், தனது வயிற்றில் கட்டி ஏதேனும் உருவாகியிருக்கலாம் எனச் சந்தேகித்து மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, அவர் கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த எதிர்பாராத தகவலால் அதிர்ச்சியடைந்த அவருக்கு, அடுத்த ஐந்து மணி நேரத்திலேயே குழந்தை பிறந்துள்ளது.
இந்தச் சம்பவம் அவரையும் மருத்துவக் குழுவினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது வயது மற்றும் மாதவிடாய் நின்றுவிட்டதாகக் கருதியமை உள்ளிட்ட காரணங்களால் கர்ப்பமாக இருப்பதை உணர முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கர்ப்பத்திற்கான வழக்கமான ஆரம்ப அறிகுறிகள் எதுவும் தென்படாததால் அவரால் கர்ப்பத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாமல் போயுள்ளது.
கர்ப்பமாக இருப்பதை அறியாமலேயே கர்ப்பகாலத்தின் பெரும்பகுதியைக் கடந்து, பிரசவத்திற்கு மிக அண்மையிலேயே அதனை அறிந்துகொள்ளும் இத்தகைய அரிதான நிலை மருத்துவ உலகில் ‘கிரிப்டிக் கர்ப்பம்’ (Cryptic Pregnancy) என அழைக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம், கர்ப்பத்தின் வழக்கமான அறிகுறிகள் தென்படாத சில சந்தர்ப்பங்களில் கர்ப்பம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.