கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் பூதவுடல் நேற்று நல்லடக்கம்
பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் பூதவுடல் நேற்று (3) செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கால்பந்தாட்டத்தின் மன்னன் பேலே கடந்த வியாழக்கிழமை தனது 82 ஆவது வயதில் காலமானார்.
பேலே விளையாடிய கால்பந்தாட்டக் கழகமான பிரேஸிலின் சான்டோஸ் நகரிலுள்ள சான்டோஸ் கழகத்தின் விலா பெல்மைரோ அரங்கில் அவரின் பூதவுடன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (02) காலை முதல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் லூலா டா சில்வா, சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்பன்டினோ உட்பட சுமார் 2 லட்சத்துக்கு அதிகமானோர் பேலேயின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின் பேலேயின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை( இலங்கை, இந்திய நேரப்படி புதன் அதிகாலை) நல்லடக்கம் செய்யப்பட்டது.
சான்டோஸ் நகரிலுள்ள 14 மாடிகளைக் கொண்ட செங்குத்தான கல்லறைக் கட்டடமொன்றின் 9 ஆவது மாடியில் பேலேயின் உடல் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.