சிரேஷ்ட அரச அதிகாரிகளின் வணிக வகுப்பு பயணங்களுக்குக் கட்டுப்பாடு
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலகங்களில் பணியாற்றுபவர்கள் உட்படச் சிரேஷ்ட அரச அதிகாரிகள் வெளிநாட்டு விஜயங்களின்போது, விமானங்களில் வணிக வகுப்பு பயணங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை ஜனாதிபதி செயலகம் விரைவில் வெளியிடவுள்ளது.
அதன்படி, இதுவரை வசதிகளை அனுபவித்த பல அதிகாரிகள் சாதாரண வகுப்பில் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவுள்ளது.
வழமையாக, உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சரவை செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் வணிக வகுப்புக்களில் பயணம் செய்யும் தகுதியைக் கொண்டிருக்கின்றனர்.
வணிக வகுப்பில் பயணம்
இந்தநிலையில், அடுத்த வாரம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ள வெளி விவகார அமைச்சின் பிரதிநிதிகள் குழுவொன்று வணிக வகுப்பில் முன்பதிவு செய்து, அதற்காக ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 800,000 ரூபா செலுத்தப்பட்டமை தெரியவந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருந்த போதிலும் மேலும் பல அரச அதிகாரிகள் வணிக வகுப்பில் பயணம் செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களின்போது ஹோட்டல் தங்குவதற்கும்
சுற்றறிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
செலவினங்களைக் குறைக்கும் அரசின் கொள்கையின்படி இந்தச் சுற்றறிக்கை
வெளியிடப்படவுள்ளது.