கனடா மத்திய வங்கி வட்டி விகிதம் தொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பு
கனடா மத்திய வங்கி (Bank of Canada) தனது அடிப்படை வட்டி விகிதத்தை புதன்கிழமை 2.25 சதவீதமாக மாற்றமின்றி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது இந்த ஆண்டிற்கான மத்திய வங்கியின் முதல் வட்டி விகிதத் தீர்மானமாகும்.
அமெரிக்க சுங்க வரி நடவடிக்கைகளால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து கனடா பொருளாதாரம் மெதுவாக மீளும் எனவும் மத்திய வங்கி கணித்துள்ளது.

இந்த வட்டி விகிதத்தை நிலைநிறுத்தும் முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்ததாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பரில் வட்டி குறைப்பு சுழற்சியை இடைநிறுத்தியதிலிருந்து கனடா பொருளாதாரம் மத்திய வங்கியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவே முன்னேறி வருவதாக மத்திய வங்கி ஆளுநர் டிஃப் மேக்லெம் (Tiff Macklem) கூறினார்.
அதே நேரத்தில், அரசியல்–புவியியல் அபாயங்கள் மற்றும் கனடா–அமெரிக்கா–மெக்சிகோ (CUSMA) வர்த்தக ஒப்பந்தத்தின் வரவிருக்கும் மறுஆய்வு காரணமாக, நிலைமைகள் குறித்து உள்ள நிச்சயமற்றத்தன்மை “அசாதாரணமாக அதிகம்” எனவும் அவர் எச்சரித்தார்.
தற்போதைய சுங்க வரிகள் மற்றும் தொடரும் நிச்சயமற்ற சூழ்நிலைக்கு கனடா பொருளாதாரம் எவ்வாறு தன்னைச் சீரமைத்துக்கொள்ளும் என்பதை மதிப்பிடுவதற்கு இன்னும் நேரம் தேவை என மேக்லெம் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர் குழு (Governing Council) தற்போதைய பொருளாதார முன்னறிவிப்புகளின் அடிப்படையில் இந்த வட்டி விகிதம் “சரியான நிலையில் உள்ளது” எனக் கருதுவதாகவும், ஆனால் அடுத்த வட்டி மாற்றம் எப்போது அல்லது எந்த திசையில் நடைபெறும் என்பதை கணிக்க மிகவும் கடினம் எனவும் அவர் கூறினார்.
இந்த வட்டி விகித முடிவுடன் இணைந்து, கனடா மத்திய வங்கி புதுப்பிக்கப்பட்ட பொருளாதார மற்றும் பணவீக்க முன்னறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.