கனடாவில் பணவீக்கம் உயர்வு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
கனடாவின் மத்திய வங்கியான 'பாங்க் ஆஃப் கனடா' தனது கொள்கை வட்டி வீதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தி 2.5 சதவீதமாக அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் வட்டி வீத உயர்வு இதுவாகும்.
எரிபொருள் விலையேற்றம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிப்பதைத் தடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
கனடா வங்கி வெளியிட்டுள்ள அக்டோபர் மாத பணவியல் கொள்கை அறிக்கையில், மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

1. எரிபொருள் மற்றும் எரிசக்தி பொருட்களின் விலை உயர்வு.
2. அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக உறவில் நிலவும் நிச்சயமற்ற தன்மை. தற்போது கனடாவில் பணவீக்கம்
3.1 சதவீதமாக உள்ளது. எரிசக்தி விலை உயர்வு இன்னும் பிற துறைகளில் முழுமையாகப் பிரதிபலிக்காவிட்டாலும், உற்பத்திச் செலவு அதிகரித்து வருவதால் வணிகங்கள் அந்தச் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வாய்ப்புள்ளதாக வங்கி எச்சரித்துள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வணிக நிறுவனங்களில் 60 சதவீதம், அடுத்த 12 மாதங்களில் தங்களது செலவு அதிகரிப்பை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளன.
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கனடா வங்கியின் ஆளுநர் டிஃப் மேக்லெம், ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் பணவீக்கத்தின் போக்கு மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
"பணவீக்கத்தின் வளர்ச்சி கணிசமாக உயர்ந்துள்ள நிலையிலும், பொருளாதாரம் மீண்டு வரும் தன்மையைக் காட்டுவதாலும், அதிகப்படியான எரிசக்தி விலைகள் ஒட்டுமொத்த பணவீக்கமாக மாறுவதைத் தடுக்க வட்டி வீதத்தை உயர்த்துவது அவசியமாகிறது என மத்திய வங்கி ஆளுனர் டிஃப் மேக்லெம் தெரிவித்துள்ளார்.