கனடா சூதாட்ட விடுதிகளில் 2 இலட்சம் டொலர் மோசடி: நால்வர் கைது
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள சூதாட்ட விடுதிகளில் 200,000 டொலர்களுக்கும் அதிக தொகையை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகாணத்தில் திட்டமிட்ட குற்றங்களை ஒடுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் கூட்டுப் படைகளின் சிறப்பு அமலாக்கப் பிரிவு, வான்கூவர் சூதாட்ட விடுதி ஒன்றில் இந்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையை அடுத்து, இக்கைது நடவடிக்கையை அறிவித்தது.
சந்தேகநபர்களான இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சூதாட்ட விடுதியில் மோசடியில் ஈடுபடுவதாக, மாகாணத்தின் அனைத்து சூதாட்டங்களையும் ஒழுங்குபடுத்தும் 'சுயாதீன சூதாட்டக் கட்டுப்பாட்டு அலுவலகம்' கடந்த மே 4 ஆம் திகதி பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த நாளே வான்கூவரில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் செயல்முறைகள் முடியும் வரை தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது, குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்டதாக நம்பப்படும் சுமார் 330,000 டொலர் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
விளையாட்டின் போது மோசடி செய்தல், குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருத்தல், போலி ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குழுவிற்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த மோசடித் திட்டம் எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்பது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் தற்போதைக்கு வெளியிட முடியாது என தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்த விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.