ஹாரி பாட்டர் அலங்காரத்திற்காக மன்னிப்பு கோரிய கனடிய நகரம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள 'சன்ஷைன் கோஸ்ட்' பகுதியில் அமைந்துள்ள கிப்சன்ஸ் நகரம், தனது நகராட்சிப் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த ஹாரி பாட்டர் கருப்பொருள் அலங்காரம் தொடர்பில் சமூகத்தில் எழுந்த விமர்சனங்களை அடுத்து உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.
ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு பூங்காக்கள் துறையின் முயற்சியைப் பாராட்டி, அக்டோபர் 24 அன்று இந்த ஹாரி பாட்டர் அலங்காரத்தின் புகைப்படங்களை கிப்சன்ஸ் நகராட்சி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தது.
எனினும், பொதுமக்கள் சிலரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, நகராட்சி நிர்வாகம் தனது மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டது.

ஹாரி பாட்டர் புத்தகத் தொடரின் ஆசிரியரின் பகிரங்கக் கூற்றுகள் மற்றும் நடவடிக்கைகளின் காரணமாக, அந்தத் தொடர் பலருக்கும், குறிப்பாக திருநங்கைகளுக்கும் மனவேதனை அளிக்கும் ஒரு தலைப்பாக மாறியுள்ளது என்பதை நாங்கள் உணர்கிறோம் என நகராட்சி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அலங்காரம் ஒரு மகிழ்ச்சியான ஹாலோவீன் கருப்பொருளாக மட்டுமே அமைக்கப்பட்டபோதிலும், இது வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளதை நாங்கள் அறிவோம். இதன் காரணமாக மனதளவில் காயமடைந்தவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், பெறப்பட்ட கருத்துக்களை எதிர்கால முடிவுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ள உறுதியளிப்பதாகவும் நகரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும், வான்கூவர் பூங்கா வாரியம் ஸ்டான்லி பூங்காவில் ஹாரி பாட்டர் தொடர்பான ஒரு பெரிய நிகழ்வை நடத்தியதற்காகக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
நகரத்திற்குப் பெருந்தொகை வருவாயை ஈட்டித் தரும் என்ற எதிர்பார்க்கப்பட்ட அந்நிகழ்வு ரத்து செய்யப்படாவிட்டாலும், அத்தீர்மானத்தை எடுத்ததற்காகவும் "திருநங்கைகள், பாலின மாறுபட்ட மனிதர்கள் சமூகத்தினருக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காகவும்" மன்னிப்பு கோரும் தீர்மானத்தை பூங்கா வாரியம் ஏகமனதாக நிறைவேற்றியிருந்தது.