பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு உதவி செய்யக் களம் இறங்கும் 200 வெளி மாகாண வீரர்கள்!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீயின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தவும், உள்ளூர் தீயணைப்பு வீரர்களுக்கு ஓய்வு அளிக்கவும் பிற பகுதிகள் மற்றும் வெளி மாகாணங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்திற்கு வரவுள்ளனர்.
கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் யூகான் பகுதிகளில் இருந்து பல டஜன் தீயணைப்பு வீரர்கள் இந்த வாரத்திற்குள் வந்து சேரவுள்ளனர்.

ஆகஸ்ட் மாத நீண்ட விடுமுறைக்குப் பிறகு, மெக்சிகோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் உதவிக்காக கனடா வரவுள்ளனர். இணைந்து செயல்படுவதன் மூலம் நிலப்பரப்பில் தீயணைப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இடைவிடாது உழைக்கும் உள்ளூர் வீரர்களுக்குத் தேவையான ஓய்வும் கிடைக்கும்.
மாகாணம் முழுவதும் 145 இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதில் 69 தீச்சம்பவங்கள் முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்து எரிகின்றன. பாஸ்டன் பார் மற்றும் கிளிண்டன் ஆகிய பகுதிகளில் பல கட்டடங்கள் தீயில் சேதமடைந்துள்ளன.
பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கைகளும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது 974 தீயணைப்பு வீரர்கள், 162 விமான ஆதாரங்கள், 130 கனரக வாகனங்கள் மற்றும் 248 கட்டடப் பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், காட்டுத்தீ காரணமாகப் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், பயணிகள் வழித்தடங்களைச் சரிபார்த்துப் பயணங்களை மேற்கோள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.