அமெரிக்காவில் லாரியுடன் பீர் திருட்டு.. கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பீர் தயாரிப்பு நிறுவனமான Pabst Brewing Company-க்கு சொந்தமான சுமார் 40,000 பவுண்ட் எடையுள்ள பீர், கலிபோர்னியாவில் உள்ள விநியோக மையத்தில் இருந்து திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரக்கணக்கான Pabst Blue Ribbon பீர் கேன்கள் இருந்ததாக கூறப்படுகிறது.' ஆகஸ்ட் 17ஆம் தேதி, திருடன் போலி ஆவணங்களை பயன்படுத்தி Montclair பகுதியில் உள்ள Anheuser-Busch விநியோக மையத்திலிருந்து சரக்கை எடுத்து சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 25,000 அமெரிக்க டாலர் மதிப்புடையது
சான் டியாகோவுக்கு செல்ல வேண்டியிருந்த இந்த சரக்கு, சுமார் 25,000 அமெரிக்க டாலர் மதிப்புடையது என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், Pabst நிறுவனம் சமூக வலைதளங்களில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
“40,000 பவுண்ட் பீர் திருடப்பட்டுள்ளது” என பதிவிட்டு, திருடப்பட்ட சரக்கை திருப்பிக் கொடுக்குமாறும் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், தகவல் கொடுத்து வழக்கை தீர்க்க உதவுபவர்களுக்கு பரிசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, 40,000 பவுண்ட் பீர் இருக்கும் லாரியை திருடியவர்கள், குடித்த பிறகு அந்த லாரியை எங்கே நிறுத்தினார்கள் என்பதையே மறந்துவிடுவார்கள் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.