பறக்கும் விமானத்தில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டவருக்கு 8 ஆண்டுகள் சிறை
பெலாரஸ் நாட்டில் அரசுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதாக கூறி, பறக்கும் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 மே மாதம் பெலாரஸ் பத்திரிகையாளரான ராமன் பிரதாசெவிச் கைது செய்யப்பட்ட சம்பவம் மேற்கத்திய நாடுகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
குறித்த பத்திரிகையாளர் அப்போது பயணித்த விமானமானது அவசரமாக தரையிறக்கப்பட்டதும் பெலாரஸ் அரசால் முன்னெடுக்கப்பட்ட கடத்தல் முயற்சி எனவும் உலக தலைவர்களில் சிலர் குறிப்பிட்டிருந்தனர்.
சம்பவத்தன்று கிரேக்கத்தில் இருந்து லிதுவேனியா புறப்பட்டு சென்றுள்ளது Ryanair பயணிகள் விமானம். ஆனால் குறித்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பெறப்பட்ட தகவலை அடுத்து, பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் பகுதியில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உண்மையில் அது வெறும் புரளி என்பது அம்பலமானதுடன், அந்த விமானத்தில் பயணம் செய்த பத்திரிகையாளரான ராமன் பிரதாசெவிச் என்பவரை கைது செய்யவே இந்த நாடகம் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
பெலாரஸ் நாட்டவரான பிரதாசெவிச் சம்பவத்தின் போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். விமானத்தில் இருந்து பிரதாசெவிச் கைதானதுடன், அவரது ரஷ்ய காதலியும் பொலிசாரிடம் சிக்கினார்.
பத்திரிகையாளரான பிரதாசெவிச் டெலிகிராம் சமூக ஊடகத்தில் மக்கள் சார்பான கருத்துகளை வெளியிட, 2020 தேர்தலின் போது வெடித்த மக்கள் போராட்டங்களில் அந்த கருத்துகள் பரவலாக பயன்படுத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரதாசெவிச் மீது கலவரத்தை தூண்டுதல், ஆட்சியை கைப்பற்ற சதி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
தற்போது இந்த வழக்கில் பிரதாசெவிச் 8 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.