பெல்ஜியத்தின் புகழ்பெற்ற 'பிரெஞ்சுப் பொரியல்' உற்பத்திக்குப் பேராபத்து
பெல்ஜியத்தில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அங்குப் பயிரிடப்படும் உருளைக்கிழங்குகளின் பருமன் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.
இதனால், அந்நாட்டின் புகழ்பெற்ற 'பிரெஞ்சுப் பொரியல்' (Frites) உற்பத்திக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வசந்த காலத்தின் இறுதியில் பெய்த கடும் மழையினால் மண்வளம் பாதிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து கோடைகாலத்தில் நிலவிய அதீத வெப்பமும் வறட்சியுமே உருளைக்கிழங்குகளின் வளர்ச்சி குன்றியமைக்குப் பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
ஏற்றுமதி மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தங்களை முன்கூட்டியே செய்துள்ள விவசாயிகள், தங்களது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காகக் கடந்த ஆண்டின் மேலதிக விளைச்சலில் சேமிக்கப்பட்ட உருளைக்கிழங்குகளைக் கொண்டே தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்குப் பொரியல்களை (Frites surgelées) ஏற்றுமதி செய்வதில் பெல்ஜியம் உலகளவில் முதலிடம் வகிக்கின்றது.
ஆண்டுதோறும் சுமார் ஆறு மில்லியன் தொன் உருளைக்கிழங்குகளைப் பதப்படுத்தும் இந்நாடு, தமது உற்பத்தியில் 90 விழுக்காட்டை 120-இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.
இந்நிலையில், தற்போதைய விளைச்சல் வீழ்ச்சியால் உருளைக்கிழங்குகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை, நுகர்வோர் மத்தியில் பாரிய விலையேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொரியல் தயாரிப்பதற்கு ஏற்ற நீளமான மற்றும் பெரிய உருளைக்கிழங்குகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், எதிர்வரும் நாட்களில் இதன் விலைகள் அதிகரிக்கக்கூடும் என 4,500 உணவகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெல்ஜிய தேசியப் பொரியல் தயாரிப்பாளர் சங்கம் (Association nationale belge des frituristes) எச்சரித்துள்ளது.