பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர்! 8 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி
செர்பியாவின் தலைநகர் பெல்கிறேட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 சிறுவர்களும் காவலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இச் சம்பவத்தில் 6 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெல்கிறேட்டில் உள்ள Vladislav Ribnikar எனும் குறித்த பாடசாலையில் கல்வி பயிற்றுவரும் 14 வயது மாணவர் ஒருவர் துப்பாக்கி சூட்டை நடத்தப்பட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாணவர் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
செர்பியாவில் இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் தடவை என அந்நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய பின்னர், குறித்த மாணவர் தாமாகவே பொலிஸாருக்கு அழைப்பு மேற்கொண்டு, தகவல் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் ஒரு மாதத்திற்கு முன்பே தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாகவும், அவர் இலக்கு வைக்கும் சிறுவர்களின் "பட்டியலை" எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 2009 இல் பிறந்தவர்கள் - அதாவது சம்பவத்தின் போது அவர்களுக்கு 13 அல்லது 14 வயது இருக்கும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், செர்பியாவில் 3 நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.