ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை தொடங்கினார் பைடன்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான தனது ஐந்து நாட்கள் சுற்றுப் பயணத்தை நேற்று ஆரம்பித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவுக்கு சென்ற ஜோ பைடன் (Joe Biden), அந்த நாட்டின் புதிய ஜனாதிபதி யூன் சுக் இயோலை (Yoon Suk-yeol ) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
யூன் (Yoon Suk-yeol )பதவியேற்ற பிறகு இரு தலைவர்களும் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். அத்துடன் அங்குள்ள சாம்சங் நிறுவனத்தின் கணினிகளுக்கான செமி கண்டக்டர் தயாரிப்பு நிறுவன ஆலையை நேரில் பார்வையிட்டார்.
உலகம் முழுவதும் வாகனம், சமயலறை சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவிலும் உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்திய செமி கண்டக்டர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, டெக்ஸாஸ் நகரில் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை சாம்சங் அமைக்கவிருக்கிறது.
இந்தச் சூழலில், பியோங்டேக்கிலுள்ள அந்த நிறுவன ஆலையை பைடன் (Joe Biden) நேரில் பார்வையிட்டார். இந்நிலையில் முதலாவதாக தென் கொரியா சென்ற அமெரிக்க ஜனாதிபதி , அடுத்ததாக ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வார்.
அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் வருகிற 24ஆம் திகதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் குவாட் உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.