கனடாவில் கொலையாளியைப் பிடிக்க 'பில்போர்டு' மூலம் பொலிஸார் மேற்கொண்ட நூதன முயற்சி
கனடாவின் கலிடன் பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மர்மக் கொலை வழக்கை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP), கொலையாளிகளைப் பிடிக்கப் பொதுமக்களின் உதவியை நாடி ஒரு நூதன முறையைக் கையாண்டுள்ளது.
கடந்த 2024 ஏப்ரல் 1-ஆம் நாள், கலிடனின் கிங்குவாகுசி சாலை அருகே 65 வயதான டேவிட் ராப்சன் என்பவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
பிரேதப் பரிசோதனையில் அவர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவர் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கில் துப்பு துலக்கப் புதிய உத்தியைப் பொலிசார் கையில் எடுத்துள்ளனர்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக முக்கிய ஆதாரமாகத் தேடப்படும் டேவிட் ராப்சனின் கார் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து, அவர் பயன்படுத்திய '2017 பிளாக் கியா ஸ்போர்டேஜ்' (2017 Black Kia Sportage) ரக கார் மற்றும் அவரது புகைப்படத்தை உள்ளடக்கிய பிரம்மாண்ட விளம்பரப் பலகையை (Billboard) ஆரஞ்ச்வில் பகுதியில் பொலிஸார் காட்சிப்படுத்தியுள்ளனர்.
அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் பயணிகளுக்கு டேவிட் ராப்சனைப் பற்றியோ அல்லது அவரது காரைப் பற்றியோ ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால், அதைக் கொண்டு வழக்கின் மர்மத்தை உடைக்க முடியும் எனப் புலனாய்வுத் துறையினர் நம்புகின்றனர்.
"டேவிட் ராப்சனுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்து கொள்ள இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கும் அவரது குடும்பத்தினருக்குப் பதில் சொல்ல விரும்புகிறோம். இந்த விளம்பரப் பலகை யாருக்காவது ஏதேனும் ஒரு தகவலை நினைவுபடுத்தும் என நம்புகிறோம்" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கார் குறித்த தகவல்களைத் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகத் தங்களை அணுகுமாறும் டஃபெரின் போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.