அமெரிக்கக் குழந்தைகளுக்கு அடித்த அதிஸ்டம்; பில்லியன் கணக்கான டொலர் நன்கொடை
அமெரிக்கக் குழந்தைகளுக்கு SpaceX நிறுவனத்தின் பங்குகளை இலவசமாக வழங்குவதற்காக பில்லியன் கணக்கான டொலர்களை நன்கொடையாக வழங்க எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Trump Accounts’ எனப்படும் சிறுவர் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது.
இதன்படி, தகுதிபெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் SpaceX நிறுவனத்தின் ஒரு பங்கும், எலான் மஸ்க்கின் தனிப்பட்ட நன்கொடையாக மேலும் ஒரு பங்கும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
SpaceX நிறுவனத்தின் அண்மைய பங்கு விலைகளின் அடிப்படையில், இந்த ஒட்டுமொத்த நன்கொடையின் பெறுமதி சுமார் 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் SpaceX நிறுவனத்தின் இரண்டு பங்குகள் கிடைக்கும். ஒன்று நிறுவனத்திடமிருந்தும் மற்றொன்று என்னிடமிருந்தும் தனிப்பட்ட முறையிலும் வழங்கப்படும்" என எலான் மஸ்க் தனது X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தின் தகவலின்படி, ‘Trump Accounts’ திட்டத்தின் கீழ் இதுவரை 9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை வைப்பிலிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாகவே மஸ்க்கின் நன்கொடை வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, SpaceX நிறுவனத்தின் தலைவரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான க்வின் ஷாட்வெல், இந்தத் திட்டத்திற்காக நிறுவனத்தின் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பங்குகளை நன்கொடையாக வழங்க உறுதியளித்துள்ளார்.
செல்லுபடியாகும் சமூகப் பாதுகாப்பு இலக்கத்தைக் கொண்ட 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் இந்தக் கணக்குகளைப் பெறுவதற்குத் தகுதி பெறுகின்றனர். எனினும், குறித்த சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கணக்குகளைச் செயற்படுத்த வேண்டும்.
மேலும், 2025 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2028 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பிறக்கும், தகுதியுடைய அமெரிக்கக் குடியுரிமை பெற்ற குழந்தைகளுக்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் ஆரம்ப வைப்புத்தொகையாக 1,000 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளன.
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நீண்டகால சேமிப்பு மற்றும் முதலீடுகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.