தென்னாப்பிரிக்காவில் தொடரும் கொடூரம் ; நிர்வாண நிலையில் அடுத்தடுத்து 9 பெண்களின் சடலங்கள் மீட்பு
தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை காவல்துறை மீட்டுள்ளது.
நேற்று (17) எகூர்ஹுலேனி (Ekurhuleni) நகராட்சிக்குட்பட்ட கெம்ப்டன் பார்க் (Kempton Park) பகுதியில் ஒன்பதாவது பெண்ணின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையால் அந்தப்பகுதி முடக்கப்பட்டுள்ளது (lockdown).

குறித்தப் பகுதியில் இதுபோன்ற நிர்வாணக் கோலத்திலான மூன்று உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொடர் கொலைகள், இவை ஒரு தொடர் கொலையாளியால் (serial killer) நடத்தப்பட்டிருக்கலாமோ என்ற பொதுமக்களின் பீதியை அதிகரித்துள்ளன.
முதல் எட்டு படுகொலைகளில் சில ஒற்றுமைகள் "மிகவும் கவலை அளிக்கும் வகையில்" இருப்பதாக காவல்துறை முன்னதாக எச்சரித்திருந்தது.
இந்தநிலையில், "பல சந்தேக நபர்கள் அல்லது தனித்தனி குற்றவாளிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட அனைத்து கோணங்களிலும் விசாரணையாளர்கள் விசாரித்து வருகின்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை கண்டெடுக்கப்பட்ட உடலங்கள் அனைத்தும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட பெண்களுடையவை ஆகும். அனைத்து உடல்களும் நிர்வாணமாகவோ அல்லது அரைநிர்வாணமாகவோ கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சில உடல்களில் ஒரே மாதிரியான காயங்களும் காணப்படுகின்றன. முதல் உடல் கடந்த ஜூலை 17 அன்று நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சத்தில் உள்ளதை இந்தக் கொலைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் அதிக பெண் படுகொலை (femicide) விகிதங்களைக் கொண்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாக கருதப்படுகிறது. இதன்படி 2026, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் தென்னாப்பிரிக்க காவல்துறை 9,782 வன்புணர்வு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்படுகொலைகளை தென்னாப்பிரிக்காவின் தேசிய பேரிடர் முகாமைத்துவ மையம் தேசிய பேரிடராக அறிவித்தது.
இந்தநிலையில் தற்போதைய தொடர் கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உதவும் தகவல்களுக்கு 400,000 தென்னாப்பிரிக்க ராண்ட் ($25,000) சன்மானம் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த பிரதேச பெண்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.