மானிடோபாவில் காணாமல்போன நபர் ஒரு மாதத்தின் பின் சடலமாக மீட்பு
கடந்த மாதம் கனடாவின் மானிடோபா மாகாணத்தில் காணாமல்போன அல்பெர்ட்டாவைச் சேர்ந்த 60 வயது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
அல்பெர்ட்டாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ரெட்மண்ட் என்பவர், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி மானிடோபாவின் கெல்சி பகுதியில் காணாமல்போயிருந்தார்.
இவர் வழக்கமாக நெல்சன் ஆற்றின் கரையில் மீன்பிடிக்கச் செல்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரெட்மண்டின் குடிலுக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட தேடுதலின் போது, கெல்சி மின் உற்பத்தி நிலைய அணையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அவரது மீன்பிடி உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
செப்டம்பர் 1 ஆம் திகதி கெல்சி அணைப் பகுதியில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, ஆற்றங்கரைக்கு அருகே சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.
வினிபெக் நகரத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மீட்கப்பட்டவர் ஜேம்ஸ் ரெட்மண்ட் என்பது முறைப்படி உறுதி செய்யப்பட்டது.
இந்த மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கு இடமான சூழலும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.