கனடாவில் ஓராண்டிற்கு முன் காணாமல் போன ஒன்டாரியோ சிறுவன் சடலமாக மீட்பு
கனடாவின் வடக்கு சஸ்காச்சுவான் பகுதியில் ஓராண்டிற்கு முன்பு காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட ஒன்டாரியோவைச் சேர்ந்த சிறுவனின் உடலை கனடிய பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
இந்த மரணத்தை ஒரு படுகொலைச் சம்பவமாகப் பதிவு செய்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒன்டாரியோவின் பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த 16 வயதான ஜே'சியா வெப்-லாங் என்ற இந்த சிறுவன், கடந்த 2025 மே 16 அன்று தான் தனது குடும்பத்தினருடன் கடைசியாகப் பேசியுள்ளான்.
காணாமல் போன காலகட்டத்தில் அவன் சஸ்காடூன் நகரில் இருந்து வடகிழக்கே 500 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் உள்ள 'பெலிகன் நேரோஸ்' என்ற ஒதுக்குப்புறமான பகுதியில் வசித்து வந்ததாகத் தெரியவந்துள்ளது.
சிறுவன் தொடர்புகொள்ளாததைத் தொடர்ந்து, அவனது குடும்பத்தினர் ஒன்டாரியோவில் உள்ள பீல் பிராந்திய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, 2025 ஜூலை மாதத்தில் சஸ்காச்சுவான் பொலிஸாரின் முக்கிய குற்றப் பிரிவு இந்த விசாரணையைக் கையில் எடுத்தது. சிறுவன் காணாமல் போனதில் மர்மம் இருப்பதாகக் கருதி அவர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டத் தேடுதல் வேட்டையின் போது மனித உடலின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அது காணாமல் போன ஜே'சியா வெப்-லாங்கின் உடல் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு படுகொலை என பொலிஸார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சிறுவனின் மரணம் குறித்து அவனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க 'பாதிக்கப்பட்டோர் நலச் சேவை' (Victim Services) பிரிவு முன்வந்துள்ளது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.