சிரியா உணவகத்தில் குண்டுவெடிப்பு ; 9 பேர் பலி... பலர் காயம்
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (02) இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
டமாஸ்கஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்திற்கு மிக அருகில் உள்ள உணவகமொன்றிலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

குறித்த உணவகமானது நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், அங்கு பணியாற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் மதிய உணவு இடைவேளையின் போது அங்கு ஒன்று கூடுவது வழக்கமாகும்.
இந்நிலையில், நேற்று (02) மதிய வேளையில் உணவகம் வாடிக்கையாளர்களால் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த போதே இந்த திடீர் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த 20 இற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிரிய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.