கனடாவுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கொண்டுவர முயன்ற அமெரிக்கர்கள்!
அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை எடுத்துவர முயன்ற அமெரிக்கர்களிடமிருந்து பல துப்பாக்கிகள், 17 தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் 11 வெடிமருந்து தோட்டாக்களை கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவன அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஃபோர்ட் ஃபிரான்சஸ் , தண்டர் பே மற்றும் கிங்ஸ்டனுக்கு அருகிலுள்ள லேண்ட்ஸ்டவுன் எல்லைச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான இரண்டாம் கட்ட வாகனச் சோதனைகளின்போதே இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்டவற்றுள் பெரும்பாலானவை கைத்துப்பாக்கிகள் ஆகும். அமெரிக்காவில் தங்கள் வாகனங்களில் துப்பாக்கிகளை வைத்திருக்கப் பழகிய பலர், கனடாவுக்குள் நுழையும் போது அதை எடுத்து வருவதை மறந்துவிடுகிறார்கள் அல்லது இங்கும் அதற்கு அனுமதியுண்டு என தவறாக நினைக்கிறார்கள்.

ஆனால் சிலர் வேண்டுமென்றே குற்றச் செயல்களுக்காகத் துப்பாக்கிகளைக் கடத்த முயல்கின்றனர் என கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லைச் சாவடியை அடையும் போது தங்களிடம் துப்பாக்கி இருப்பதை முறைப்படி அறிவிப்பவர்கள், அந்த ஆயுதங்களை மீண்டும் அமெரிக்காவுக்கே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர்.
ஆனால், மறைத்து வைத்து எடுத்துவர முயன்று அதிகாரிகளிடம் சிக்கினால், துப்பாக்கியுடன் சேர்த்து அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும், வாகனத்தை மீட்க அதிக அபராதம் செலுத்த வேண்டும், கனடாவிற்குள் நுழைய உடனடித் தடை விதிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுவர், குற்றவியல் நோக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய பொருட்கள் அல்லது துப்பாக்கிகள் வாகனத்தில் இருந்தால், எல்லை அதிகாரியிடம் அதை மறைக்காமல் நேர்மையாகக் கூறிவிடுவது பொருத்தமானது கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.