UNGA 2026 கூட்டத்தொடர் ; நியூயார்க்கில் கைவிடப்பட்ட சூட்கேஸால் பரபரப்பு!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச்சபை (UNGA 2026) கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், ஐநா தலைமையகத்திற்கு மிக அருகில் உள்ள பகுதியில் உரிமை கோரப்படாத சந்தேகத்திற்குரிய சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கின் மேன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிறைஸ்லர் கட்டடத்திற்கு (Chrysler Building) அருகிலும், ஐநா தலைமையகத்தில் இருந்து சில தெருக்கள் தொலைவிலும் உள்ள நடைபாதையில் இந்த சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது.

மோப்ப நாய்ப் பிரிவு சோதனை
நியூயார்க் காவல் துறையின் (NYPD) மோப்ப நாய்ப் பிரிவு சோதனை நடத்தியபோது, சூட்கேஸுக்குள் அச்சுறுத்தல் தரக்கூடிய பொருட்கள் இருக்கலாம் எநும் அச்சம் காரணமாக , உடனடியாக வெடிகுண்டு செயலிழப்புக் குழு மற்றும் அவசரகால மீட்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கிறைஸ்லர் கட்டடத்தில் இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் 42-வது தெரு முதல் 44-வது தெரு வரையிலான பிரதான போக்குவரத்து சாலைகள் உடனடியாக மூடப்பட்டு, மக்கள் நடமாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகின் 130-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் ஐநா மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில், இச்சம்பவம் அமெரிக்க உளவுத்துறை மற்றும் ரகசியப் காவல் பிரிவினரிடையே தீவிர அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுமார் 90 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற தீவிர சோதனைக்குப் பிறகு, அந்தச் சூட்கேஸில் வெடிபொருட்கள் எதுவுமில்லை என்றும், பொதுமக்களுக்கு எவ்விதப் ஆபத்துமில்லை என்றும் நியூயார்க் காவல்துறை மற்றும் சீக்ரெட் சர்வீஸ் அமைப்பினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.
அதேசமயம் சோதனைக்குப் பின் தடை செய்யப்பட்ட பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், மாநாடு நிறைவடையும் வரை நியூயார்க் நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.