பிரிட்டன் குத்துச்சண்டை வீரர் விபத்தில் காயம்: இருவர் பலி
பிரிட்டனின் முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் அந்தோனி ஜோஷுவா (36) நைஜீரியாவின் ஓகுன் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான கார் விபத்தில் சிக்கியதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஜோஷுவா சிறிய காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. லாகோஸ்–இபடான் அதிவேக நெடுஞ்சாலையில் திங்கட்கிழமை இந்த விபத்து இடம்பெற்றது.
அந்தோனி ஜோஷுவா பயணம் செய்த லெக்சஸ் எஸ்யூவி வாகனம், மற்றொரு வாகனத்துடன் மோதியதாக ஓகுன் மாநில காவல்துறை பேச்சாளர் ஒலுசெயி பாபாசெயி தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான சூழ்நிலைகள் தற்போது விசாரணையில் உள்ளன. ஜோஷுவா வாகனத்தின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தார். அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன; மருத்துவ கவனிப்பில் உள்ளார்,” என அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில், சேதமடைந்த வாகனத்திலிருந்து ஜோஷுவா வெளியேற்றப்படும் காட்சிகள் காணப்படுகின்றன.
விபத்து நடந்த சாலை, ஓகுன் மாநிலத்தை நைஜீரியாவின் பொருளாதார மையமான லாகோஸுடன் இணைக்கும் முக்கிய பாதையாகும்.
இதற்கிடையில், ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் அந்த வாகனம் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறிச் சென்றதாகவும், ஓவர்டேக் செய்யும் முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியுடன் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.