பாடசாலைக்கு 10 வயது சிறுவன் எடுத்துச் சென்ற பொருள்: கைதான பரிதாபம்
அமெரிக்காவின் Maine மாகாணத்தில் பாடசாலைக்கு துப்பாக்கியுடன் சென்ற 10 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மைனே மாகாணத்தின் மன்ரோ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு வெள்ளிக்கிழமை, அப்பகுதி பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். பகல் 9 மணியளவில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த பொலிசார், அந்த ஆயுதத்தை கைப்பற்றியதுடன், சிறுவனையும் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தால் அப்பகுதி மக்கள் அல்லது பாடசாலைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மன்ரோ பகுதியானது வெறும் 900 பேர் குடியிருக்கும் கிராமப் பிரதேசமாகும்.
போர்ட்லாண்டில் இருந்து சுமார் 100 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. மட்டுமின்றி, சம்பவம் நடந்த பாடசாலையில் 70 மாணவர்களே உள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஒரு பெரும்விபத்து உரிய நேரத்தில் தடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
அமைதியான கிராமம் இது, இங்குள்ள மக்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவளித்து வசித்து வருபவர்கள், அந்த சிறுவனுக்கு துப்பாக்கியை எடுத்துச் செல்லும் துணிவு எப்படி வந்தது என்பதை பொலிசார் விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.