வெனிசுவேலாவில் இடிபாடுகளில் 6 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுவன்
வெனிசுவேலாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டு 6 நாட்களுக்குப் பின்னர், இடிபாடுகளுக்குள் இருந்து 3 வயது சிறுவன் ஒருவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் லா குவைரா (La Guaira) மாகாணத்தில் உள்ள இடிபாடுகளில் இருந்து ஜோர்தான் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கரகஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வு ஏற்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளில் மக்கள் உயிருடன் இருப்பது அரிது என்ற நிலையில், 6 நாட்களின் பின் இந்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,943 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 10,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.