கோடைக்கால சுற்றுலாச் செலவுகளைக் குறைக்கும் கனடியர்கள்
தற்போதைய பொருளாதார மற்றும் நிதி ரீதியான கவலைகள் காரணமாக, இந்த ஆண்டு கோடைக்கால விடுமுறைக்கான தங்களது செலவுகளைக் குறைக்க பெரும்பாலான கனடியர்கள் திட்டமிட்டுள்ளதாகப் புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
நானோஸ் ரிசர்ச் நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்ற கனடியர்களில் கிட்டத்தட்ட பாதியளவு (43 சதவீதத்தினர்) பேர் இந்த விடுமுறைக் காலத்தில் பணத்தை மீதப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது கடந்த 2015-ஆம் ஆண்டின் புள்ளிவிவரத்தோடு (31 சதவீதம்) ஒப்பிடுகையில் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறை கனடியர்களில் 48.5 சதவீதத்தினர் இந்த கோடையில் குறைவாகவே செலவிடப் போவதாகக் கூறியுள்ளனர். மேலும், இவர்களில் 27.2 சதவீதத்தினர் தங்களது விடுமுறை நாட்களையும் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
பிரெய்ரி பிராந்தியத்தில் வசிக்கும் கனடியர்களே தங்களது விடுமுறைகளை அதிகம் குறைத்துக் கொள்கிறார்கள்.

அங்குள்ளவர்களில் 49.8 சதவீதத்தினர் இந்த ஆண்டு சுற்றுலாவிற்கு மிகக் குறைவாகவே செலவிடப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
கனடியர்களின் இந்த சிக்கன நடவடிக்கை, மற்ற மாகாணத்து சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பியிருக்கும் 'நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோர்' போன்ற சுற்றுலாத் தலங்களின் கோடைக்காலப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.