கனடாவில் 10 வயது சிறுவனின் நெகிழ வைக்கும் செயல்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் றொரன்டோவில் 10 வயது சிறுவன் ஒருவன் சிறுவர் வைத்தியசாலையொன்றுக்காக நிதி திரட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
10 வயதான ச்சோன் லேன் என்ற சிறுவனே இவ்வாறு கடுமையான குளிருக்கும் மத்தியில் ஒரு மாத காலமாக சொக்லெட் விற்பனை செய்து நிதி திரட்டியுள்ளான்.
றொரன்டோவின் முன்னணி சிறுவர் வைத்தியசாலைகளில் ஒன்றான சிக்ஸ் கிட்ஸ் வைத்தியசாலைக்கு இந்த நிதி வழங்கப்பட உள்ளது.
வைத்தியசாலைக்கு 350 டொலர்கள் திரட்டிக் கொடுக்க வேண்டுமென்ற இலக்குடன் களமிறங்கிய சிறுவன் 6130.90 டொலர்களை சேகரித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.
சிறுவர் வைத்தியசாலைக்காக எவ்வாறு நிதி திரட்டுவது என்பது பற்றிய திட்டத்தையும் சிறுவன் ச்சோனே முன்வைத்தார் என அவரது தயார் தெரிவிக்கின்றார்.
கையில் பணம் இல்லாதவர்கள் க்யூ.ஆர் கோட் மூலம் செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிதி திரட்டும் முயற்சிக்கு பாடசாலையும் மாணவர்களும் உதவியதாக தெரிவிக்கப்படுகின்றது.