கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுவர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன
கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 16 வயதுடைய இரண்டு சிறுவர்களின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட அடையாளத் தகவல்களை ரொறன்ரோ பொலிஸார் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
ரொறன்ரோவைச் சேர்ந்த எசேக்கியேல் டாரன்ஸ் ஜோசப்-ஜெஃப்ரி மற்றும் ஜாக்சன் ராபின் கிளிஃபோர்ட் பெர்சாட் ஆகிய இருவருமே இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறுவர்களின் மரணத்துடன், ரொறன்ரோ நகரில் இந்த ஆண்டு பதிவான கொலைகளின் எண்ணிக்கை 35 மற்றும் 36 ஆக அதிகரித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்லஸ்மியர் வீதி மற்றும் பிரிம்லி வீதி ஆகிய பகுதிகளுக்கு அருகே அதிகாலை 12:30 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலுள்ள பெட்ரோ-கனடா எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் சன்னிபுரூக் சுகாதார அறிவியல் நிலையத்தில் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மூன்றாவது சிறுவன் சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உயிருக்கு ஆபத்தில்லை எனவும், அடையாளம் வெளியிடப்படாத அவர் குணமடைந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அருகிலுள்ள தொழிற்சாலைப் பகுதியில் சுமார் 50 பேர் கலந்துகொண்ட தனியார் நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் எனப் பொலிஸ் துப்பறியும் சார்ஜென்ட் டிரெவர் கிரீவ் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், பிரிம்லி வீதிக்கும் மிட்லாண்ட் அவென்யூவிற்கும் இடைப்பட்ட பகுதியிலும், எல்லஸ்மியர் வீதிக்கும் லாரன்ஸ் அவென்யூவிற்கும் இடைப்பட்ட பகுதியிலும் வசிப்பவர்கள் மற்றும் வர்த்தகர்கள் அதிகாலை 12:30 முதல் 1:00 மணி வரையிலான தமது கண்காணிப்புக் கமரா காட்சிகளை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த சிறுவர்கள் மற்றும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்தவர்கள் 416-808-7400 என்ற இலக்கத்தினூடாக ரொறன்ரோ பொலிஸ் கொலைப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.