எளிதில் தாக்கியழிக்க முடியாத பிரம்மோஸ் ஏவுகணை!
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன.
இந்த ஏவுகணை இந்தியாவில் பிரம்மோஸ் என்றும் ரஷ்யாவில் 'பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்' என்றும் அழைக்கப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையே 500 நாட்களுக்கும் மேலாக போர் நீடிக்கும் நிலையில் இரு நாடுகளும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றன.
ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட உக்ரைனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அதிநவீன ஆயுதங்கள், ஏவுகணைகளை தாராளமாக வழங்கி வருகின்றன.
இந்த ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தி வருகிறது.
எனினும் ரஷ்யாவின் குறிப்பிட்ட வகை ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை என்று உக்ரைன் விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது ரஷ்யாவின் 'பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்' ஏவுகணை ஆகும். ரஷ்யாவின் காலிபர், இஸ்காந்தர், பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகள் மூலம் ஒடெசா நகரம் மீது கடந்த 20-ம் தேதி தாக்குதல் நடாத்தப்பட்டபோது பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியயவில்லை.
ரஷ்ய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் ‘‘ரஷ்ய ராணுவத்திடம் மொத்தம் 470 பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ரக ஏவுகணைகள் இருந்தன.
உக்ரைன் போரில் இதுவரை 123 ஏவுகணைகளை பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது மிக முக்கியத் தாக்குதல்களுக்கு மட்டுமே பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தன.
இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் ரஷ்யாவின் பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகளைவிட இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகதிறன் கொண்டவை.
தற்போதைய பிரம்மோஸ் ஏவுகணைகள் 450 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயும் திறன் கொண்டவை.
இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இதில் பிலிப்பைன்ஸ் அரசு ஏற்கெனவே ரூ.3,103 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக 1,500 கி.மீ. தொலைவு பாயும் பிரம்மோஸ் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இதுதொடர்பான ஆராய்ச்சி நடைபெறுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பிரம்மோஸ் ஹைப்பர்சானிக் ஏவுகணையின் உற்பத்தி தொடங்கப்படும்.
இந்த ஏவுகணை மணிக்கு 9,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.