மிரட்டிப் பணம் பறிப்பு குற்றச்சாட்டில் பிராம்ப்டன் இளைஞர் கைது
கனடாவின் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர், மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீல் பிராந்திய காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆண் ஒருவரிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்துள்ளது.
பணம் கொடுக்காவிட்டால் அவரது குடும்பத்தினர், வீடு, வணிக நிலையம் மற்றும் தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படும் எனவும், வன்முறைத் தாக்குதல் நடத்தப்படும் எனவும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 5-ஆம் திகதி அதிகாலை 4:45 மணியளவில், பாதிக்கப்பட்ட நபரின் வணிக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், சந்தேகநபர் ஒருவர் குறித்த வணிக நிலையத்திற்குச் சென்று, "அங்கிருந்த கதவு ஒன்றுக்கு அருகே பெட்ரோல் என சந்தேகிக்கப்படும் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்துள்ளார்; இதனால் வளாகத்திற்குள் தீ பரவியது" எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் வணிக நிலையம் மற்றும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குச் சுமார் 100,000 டொலர்கள் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், கடந்த ஒக்டோபர் 9-ஆம் திகதி பிராம்ப்டனைச் சேர்ந்த 29 வயதான ஜஸ்ஜீத் சிங் என்பவரைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். அவர் மீது மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, பிணை விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் 905-453-2121 (நீட்டிப்பு 2290) என்ற இலக்கத்தில் பெரும் குற்றத் தடுப்புப் பிரிவினரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.