சுவிஸ் இராஜதந்திரப் பிரதிநிதிக்கு 48 மணி நேரக் கெடு ; வடகொரியா அதிரடி வெளியேற்ற உத்தரவு
சுவிட்சர்லாந்தின் இராஜதந்திரப் பிரதிநிதியை 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு வடகொரியா உத்தரவிட்டுள்ளதுடன், அந்நாட்டின் இராஜதந்திர அலுவலகத்தையும் மூடுமாறு கோரியுள்ளது.
வடகொரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வொன்சான் (Wonsan) நகரில் செயல்படும் சொங்டோவோன் (Songdowon) சர்வதேச சிறுவர் முகாம் மீது சுவிட்சர்லாந்து தடைகளை விதித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் முகாமில் ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் கலந்துகொள்கின்றனர்.
உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து சிறுவர்களை இடமாற்றம் செய்வதில் இந்த முகாம் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறுவர் முகாம் மீது சுவிட்சர்லாந்து விதித்த தடைகளை 'அப்பட்டமான விரோதச் செயல்' என வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ (KCNA) வர்ணித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வடகொரியாவில் உள்ள சுவிட்சர்லாந்து இராஜதந்திர அலுவலகத்தின் தலைவரைத் தமது நாட்டில் இருக்கத் தகுதியற்ற நபராக (Persona Non Grata) அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாக கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த இராஜதந்திரப் பிரதிநிதி 48 மணி நேரத்திற்குள் வடகொரியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும், சுவிட்சர்லாந்தின் இராஜதந்திர அலுவலகத்தை மூட வேண்டும் எனவும் வடகொரியா வலியுறுத்தியுள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சொங்டோவோன் சிறுவர் முகாம் மீதான தடைகளைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த இராஜதந்திர மோதல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.