கனடாவில் டிராக்டர் டிரெய்லரால் ஏற்பட்ட துயரம்: மருத்துவமனையை நாடிய பலர்
ஒன்ராறியோவின் பிராம்டனில் டிராக்டர் டிரெய்லர் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கோர விபத்தில் மொத்தம் 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான சாலை 50க்கு மேற்கே உள்ள குயின் ஸ்ட்ரீட் மற்றும் தி கோர் ரோடு பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்த விபத்து நடந்துள்ளது. குறித்த விபத்தில் 10 வாகனங்கள் சிக்கியுள்ளதாகவும், போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருந்த வாகனங்கள் அவை எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வாகனங்கள் சிதைந்து போயுள்ளதுடன், பயணிகள் அதில் சிக்கிக்கொண்டதாகவும் பொலிசார் கூறியுள்ளனர். பெண் ஒருவர் நசுங்கிய வாகனத்தில் சிக்கிக்கொள்ள, சம்பவயிடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
மரணமடைந்த பெண் உட்பட 15 பேர்களை குறித்த வாகன விபத்து பகுதியில் இருந்து மீட்டதாக பீல் பிராந்திய அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.