ஐ.எஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டால் சிரியாவுக்கு பொன்னான எதிர்காலம்; ஜனாதிபதி ட்ரம்ப்
ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டால், சிரியாவுக்கு ஒரு பொன்னான எதிர்காலம் உண்டு என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

அமெரிக்கர்கள் மீது தாக்குதல்
அதன்படி, சிரியாவில், 'ஆப்பரேஷன் ஹாக்கி' என்ற பெயரில் அமெரிக்கா தாக்குலை தொடங்கி உள்ளது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கை: சிரியாவில் துணிச்சலான அமெரிக்க ராணுவ வீரர்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றனர்.
அதன் காரணமாக, நான் உறுதியளித்தபடியே, இந்தக் கொடூரமான பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா மிகக் கடுமையான பதிலடி தாக்குதலை நடத்துகிறது என்பதை அறிவிக்கிறேன்.
சிரியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் கோட்டைகள் மீது நாங்கள் மிகத் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறோம். ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டால், அந்த நாட்டிற்கு ஒரு பொன்னான எதிர்காலம் உண்டு.
சிரியாவிற்கு மீண்டும் பெருமையை மீட்டெடுக்க கடுமையாக உழைக்கும் ஒருவரால் வழிநடத்தப்படும் சிரிய அரசு இதற்கு முழு ஆதரவு அளிக்கிறது.
அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குத் தீய எண்ணம் கொண்ட அனைத்து பயங்கரவாதிகளுக்கும் இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
நீங்கள் எந்த வகையிலாவது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினாலோ அல்லது அச்சுறுத்தினாலோ, இதற்கு முன்பு நீங்கள் சந்தித்ததை விட மிகக் கடுமையான தாக்குதலைச் சந்திப்பீர்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.