பாலியல் குற்றங்கள்; பட்டங்களை துறந்தார் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ
பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ (Prince Andrew), ‘யோர்க் கோமகன்’ (Duke of York) என்ற பட்டம் உட்பட தனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பட்டங்களையும், கௌரவங்களையும் இனி பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) விவகாரத்தில் தன் மீதான தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், அவரது அண்ணன் மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எப்ஸ்டீனின் பாலியல் குற்றங்கள்
மன்னர் மற்றும் தனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்ததாகவும், தனது கடமையை குடும்பத்திற்கும் நாட்டிற்கும் முதன்மைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் குற்றங்களுக்கு ஆளான வெர்ஜீனிய கியூஃப்ரே (Virginia Giuffre) என்பவரின் புதிய நினைவுக் குறிப்பு குறித்த பகுதிகள் சமீபத்தில் வெளியானது.
அதில், இளவரசர் ஆண்ட்ரூ மீது அவர் முன்வைத்த பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் மீண்டும் பேசுபொருளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
