பிரித்தானிய மகாராணியாரின் மரணத்தை வெவ்வேறு நாட்டு மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?
பிரித்தானிய மகாராணியார் இயற்கை எய்தியபோது உலகமெங்கிலும் இருந்து இரங்கல் செய்திகள் வந்த நிலையில், சமூக ஊடகம் ஒன்றில் ஒருவர் பிரித்தானியா அடிமைகளாக வைத்திருந்தவர்களைக் குறித்த ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார்.
பிரித்தானிய மகாராணியாரின் மறைவு பலருக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், சிலர் தங்கள் நாடு பிரித்தானியாவால் ஆளப்பட்ட காலகட்டத்தை நினவுகூர்ந்துள்ள சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
அதாவது, மகாராணியாரின் மரணம், வெவ்வேறு நாட்டு மக்களிடையே, அல்லது வெவ்வேறு நாட்டு பின்னணி கொண்டவர்களிடையே மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கியுள்ளது.
File: Joe Klamar/AFP
மகாராணியாரின் மரணம் பிரித்தானியர்களிடையே துயரத்தை உருவாக்கியுள்ள நிலையில், பிரித்தானியாவில் வாழும் சில சமூகத்தினர், மன்னராட்சியால் தங்கள் சொந்த நாடு பட்ட கஷ்டங்களை நினைவுகூர்கிறார்கள்.
பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெறும் முன் தங்கள் மக்கள் நடத்தப்பட்ட விதம் தங்களுக்கு நினைவுக்கு வருவதாக தெரிவிக்கிறார்கள் சிலர்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை பின்னணி கொண்டவரான ஷாஹித் அஷ்ரஃப் என்பவர், காலனி ஆதிக்கத்தின் கீழ் தன் தாய்நாடு இருந்த காலகட்டத்தை நினைவுகூர்கிறார். எங்களுக்கு பிரித்தானிய மன்னர் குடும்பத்தைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க ஆர்வமும் இல்லை, அதே நேரத்தில் எதிர்ப்பும் இல்லை என்கிறார்.
ஆனாலும், பிரித்தானியாவிடமிருந்து தன் தாய்நாடு விடுதலை பெற்றதில் தனக்கு ஒருவித பெருமை இருப்பதையும் அவர் மறுக்கவில்லை.
Central Press/ Getty Images
மகாராணியாரின் மரணத்தைப் பொறுத்தவரை, தனிப்பட்ட விதத்தில் அது என்னை அதிகம் பாதிக்கவில்லை என்று கூறும் அஷ்ரஃப் போன்றவர்கள், அது வரலாற்று ரீதியில் ஒரு முக்கியமான நிகழ்வு என்பதை தங்களால் புரிந்துகொள்ளமுடிகிறது என்கிறார்கள்.
ஆனால், இளவரசி டயானாவைக் குறித்த நேர்மறையான எண்ணங்கள் அஷ்ரஃப் குடும்பத்தாருக்கு உள்ளன. அவர்கள் ராஜகுடும்பத்தின் கட்டுப்பாடுகளுக்கு சவால் விட்டு, பரிதாபமாக பலியான ஒரு நபராக டயானாவை பார்க்கிறார்கள்.
அடுத்து சார்லஸ் மன்னராகியிருக்கும் நிலையில், அவரது ஆட்சியும், அதுகுறித்த மற்ற நாட்டு மக்களுடைய மன நிலையும் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.