அமெரிக்காவில் இந்திய இளைஞனுக்கு நடந்த கொடூர சம்பவம் ; மீளா துயரில் குடும்பம்
அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கபில் (26). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கபில் பெற்றோர் மற்றும் 2 சகோதரிகளை காப்பாற்ற வேண்டி வேலைக்காக 3 வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்றார்.
இதற்காக, அவரது குடும்பம் சுமார் ரூ. 45 லட்சம் செலவிட்டது. ஆபத்தான டாங்கி ரூட் வழியாக மெக்சிகன் எல்லையைக் கடந்து பனாமா காடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்தார். முதலில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தார்.
சுட்டுக் கொலை
இத்தனை சிரமங்களை கடந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த கபில் ஒரு அற்ப விஷயத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் அவர் பணிபுரிந்த கடைக்கு வெளியே பொது வெளியில் சிறுநீர் கழித்த ஒருவரை கபில் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த அந்த நபர் சிறிது நேரம் கழித்து துப்பாக்கியுடன் திரும்பி வந்து கபிலை சுட்டுக் கொலை செய்தார்.
கபிலின் உடலை அரியானாவில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்று குடும்பத்தினரும் கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.