இத்தாலியில் புர்கா அணி தடை ; புதிய சட்டம் நிறைவேற்றம்
இத்தாலியில் பாடசாலைகளில் புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து, இத்தாலிய பிரதமர் மெலோனி கூறுகையில், ‘‘பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கான தடை என்பது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை. ஒரு பெண் அல்லது ஒரு சிறுமி, தனது முகத்தை மறைக்க கட்டாயப்படுத்தப்படும் போது, அவரது அடிப்படை உரிமைகளும், ஒருங்கிணைப்பும் மறுக்கப்படுகின்றன’’ என்றார்.

இதேபோல், இத்தாலிய மொழியில் போதிய திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு வகுப்பில் 30 சதவீதமாக கட்டுப்படுத்தும் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் இத்தாலிய மொழியைக் கற்க கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். ஒரு குழந்தை பள்ளியில் ஒருங்கிணைந்து கல்வி கற்பதில் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டால், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும், அந்தக் குழந்தையின் பெற்றோர் இலவச இத்தாலிய மொழிப் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் இத்தாலிய பிரதமர் மெலோனி வலியுறுத்தினார்.