திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட கோர விபத்து: 15 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் திருமண விழாவிற்கு சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 70க்கும் அதிகமானோர் அங்கிருந்து லாகூருக்கு பஸ்ஸில் புறப்பட்டனர்.
இந்த பஸ் பஞ்சாப் மாநிலம் கல்லார் கஹார் நகரில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் சாலையில் தறிக்கெட்டு ஓடிய பஸ் எதிர்திசையில் வந்த 3 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. அதன்பின்னர் பஸ் சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இருப்பினும், இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுமார் 60 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.