பயணிகளுக்கு நட்டஈடு வழங்குமாறு எயார் கனடாவிற்கு உத்தரவு
பயணிகளுக்கு நட்டஈடு வழங்குமாறு எயார் கனடா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணியாளர்களுக்கான பற்றாக்குறையினால் எயார் கனடா நிறுவனம் சில விமானப் பயணங்களை இடைநிறுத்தியும் ரத்து செய்துமிருந்தது.
இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் அமைப்பினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறை என்பது நிறுவனத்தினால் கட்டுப்படுத்தக்கூடிய ஓர் காரணி என்பதனால், பயணிகளுக்கு நிறுவனம் நட்டஈடு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
தமக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து இரண்டு பயணிகள் முறைப்பாடு செய்திருந்தனர்.
லிசா க்ரோவ்பொர்ட் மற்றும் அவரது மகன் ஆகியோர் இவ்வாறு முறைப்பாடு செய்திருந்தனர்.
விமானப் பயண கால தாமதம் காரணமாக திட்டமிட்டவாறு கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயணம் செய்ய முடியவில்லை என குறித்த இரண்டு பயணிகளும் தெரிவித்திருந்தனர்.
இந்த இரண்டு பயணிகளுக்கும் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக தலா ஆயிரம் டொலர் நட்டஈட்டை எயார் கனடா நிறுவனம் வழங்க வேண்டுமென கனேடிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் நிறுவனமான கனேடிய போக்குவரத்து முகவர் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த மே மாதம் 1ம் திகதி தொடக்கம் இதுவரையில் சுமார் 13743 பயணிகள் முறைப்பாடுகள் விமான சேவை நிறுவனங்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது.