தொழிலதிபர் ரத்தன் டாடா சற்றுமுன்னர் காலமானார்
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா சற்றுமுன்னர் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது.
86 வயதில் மோசமான உடல்நிலை காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொழிலதிபர் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
86 வயதான ரத்தன் டாடா ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ரத்தன் டாடா, அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதாகவும், வயது மற்றும் உடல்நிலை சார்ந்த வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகவும் கூறினார்.
இதற்கிடையே, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.