92 வயதில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமரூன் ஜனாதிபதி
92 வயதான கமரூன் ஜனாதிபதி பால் பியா, 2025 அக்டோபர் 12 நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எட்டாவது முறையாக பதவிக்காக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இவர் உலகில் தற்போது பதவியில் இருக்கும் வயதான தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. பியா, ஞாயிற்றுக்கிழமை தனது அதிகாரப்பூர்வ X (முன்பு ட்விட்டர்) கணக்கில் பிரஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் இவ்வறிவிப்பை வெளியிட்டார்.
நான் இந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நமது நாட்டின் சவால்களுக்கு நான் காட்டும் விடாமுயற்சி, உங்களுக்கான எனது சேவைக்கு சமமானது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் மாற்றம்
1982ஆம் ஆண்டு தனது முன்னோடியான அக்மதூ அகிட்ஜோ ராஜினாமா செய்தபோது பதவிக்கு வந்த பியா, 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்கிறார்.
கடந்த ஆண்டு 42 நாட்கள் பொதுநிகழ்வுகளிலிருந்து காணாமல் போனது உடல்நிலை குறித்த சந்தேகங்களை ஏற்படுத்தியது.
ஆனால் அரசு அதனை மறுத்தது. அதிபர் பியாவின் கட்சியான கமரூன் மக்கள் ஜனநாயக அமைப்பு Cameroon People’s Democratic Movement (CPDM) உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், கடந்த ஆண்டு முதலே அவர் மீண்டும் பதவிக்கு வர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
மாறாக, எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பியாவின் நீண்ட கால ஆட்சியால் ஜனநாயக வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் தடைப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளன.
இரண்டு முன்னாள் கூட்டணி உறுப்பினர்கள் பியாவை விட்டு விலகி, தனித்தனியாக தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளனர்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த பியாவின் மீண்டும் வேட்பு அறிவிப்பு, கமரூனில் அரசியல் மாற்றம் நடைபெறவில்லை என்பதற்கு நிரூபணமாகும். இப்போது தேவை புதிய தலைமுறை, நம்பகமான ஜனநாயகம் என மனித உரிமை வழக்கறிஞர் என்கோங்கோ பெலிக்ஸ் அக்போர் தெரிவித்துள்ளார்.