கனடா – அமெரிக்கா எல்லை மீண்டும் திறக்க நடவடிக்கை?
வடக்கு டகோட்டாவுக்கு எதிரே உள்ள எமர்சன், மனிடோபாவிலிருந்து லொறி சாரதி போராட்டகாரர்கள் வெளியேறி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லொறி சாரதிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர். இதனையடுத்து அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதன்பின்னர், அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் அதன் மூலம் போராட்டக்காரர்களை தடுக்க கனேடிய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் வடக்கு டகோட்டாவுக்கு எதிரே உள்ள எமர்சன், மனிடோபாவில் இருந்து போராட்டகாரர்கள் வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்க எல்லையில் எஞ்சியிருந்த கடைசி முற்றுகையை போராட்டகாரர்கள் வெளியேறி வருகின்றனர். இதனால், கனடா – அமெரிக்கா இடையேயான போக்குவரத்து சீராகியுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
மேலும் கனடா – அமெரிக்கா எல்லை மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் முற்றுகை தற்போது தீவிரமடைந்து வருகிறது.
பொலிஸார், ஒட்டாவாவின் தெருக்களை அடைத்து போராட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறித்தியுள்ளனர்.