தீவிரமடையும் போராட்டம்: கனடாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள்
கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடர்ந்து லொறி சாரதிகளின் போராட்டம் இடம்பெற்று வருவதால் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்திய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகி உதவி கோரியுள்ளனர்.
2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு படிப்படியாக பிற நாடுகளுக்கும் பரவியது. கடந்த 2 ஆண்டுகளில் பலமுறை உருமாறி தாக்கும் கொரோனா வைரஸ் உலகத்தையே முடக்கி போட்டுவிட்டது. பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா பரவலின் 3ஆம் அலை பாதிப்பு முடிவுக்கு வந்துள்ளது. பெரும்பாலானா மாநிலங்களில் பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளன. இருப்பினும் ஒருசில நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றனர். இதனால் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வட அமெரிக்க நாடான கனடாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுப்படவில்லை. தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாதிப்பு அதிகமுள்ள மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இங்கு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கனடாவில் படிக்கும் பிறநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் ரைசிங் ஃபீனிக்ஸ் இன்டர்நேஷனல் இன்க் அமைப்பின் மூன்று கல்லுாரிகளில் இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மான்ட்ரியலில் உள்ள எம் கல்லூரி, ஷெர்ப்ரூக்கில் உள்ள சிஇடி கல்லூரி மற்றும் லாங்குவில் உள்ள சிசிஎஸ்கியூ கல்லூரி ஆகியவற்றில் இந்திய மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். போராட்டம் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் பலரும், இந்திய துாதரகத்தை அணுகியுள்ளனர். இந்திய தூதரகம் சார்பில் கனடா நாட்டு அரசு, கியூபெக் மகாண அரசு, இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் தூதரகம் சார்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், இந்திய மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை மூடப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் வழங்க வேண்டும்.
இல்லாவிட்டால் மாற்று கல்லூரியில் அவர்களுக்கு அட்மிஷன் பெற்று கொடுக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கனடா தலைநகர் ஒட்டவாவில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.