உக்ரேனிய அகதிகளுக்காக கனேடிய தம்பதி முன்னெடுத்த நெகிழ்ச்சி செயல்
கனடாவின் வான்கூவர் தீவில் தம்பதி ஒன்று அவர்களின் ஓய்வு விடுதியை உக்ரைன் அகதிகளுக்கான குடியிருப்பாக மாற்றியுள்ளனர்.
வான்கூவர் தீவில் வசிக்கும் Brian மற்றும் Sharon Holowaychuk தம்பதியே உக்ரைன் அகதிகளுக்காக தங்களது ஓய்வு விடுதியை குடியிருப்பாக மாற்றியவர்கள்.
தங்களது 15,000-சதுர அடி ஓய்வு இல்லத்தை அகதிகள் இல்லமாக மாற்றியுள்ளதுடன், அதை உக்ரேனிய அகதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பிரையனின் தாத்தா பாட்டி உக்ரைனியர்கள் என்பதால், இந்த பிரச்சினை அவர்களுக்கும் தொடர்புடையதாகவே கருதுகின்றனர். தற்போது தங்களால் இயன்ற உதவிகளை இயலாதவர்களுக்கு அளிக்கும் நிலையில் இருப்பதாக கூறும் பிரையன்,
உக்ரைன் அகதிகள் 100 பேர்களுக்கு தங்கும் வாய்ப்பு அளிப்பதே தமது குறிக்கோள் எனவும், இதுவரை 19 பேர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஒன்றிரண்டு வாரங்களில் அவர்கள் கனடா வந்து சேர்வார்கள் எனவும் பிரையான் தெரிவித்துள்ளார்.
தங்கள் ஓய்வு விடுதியை அகதிகளுக்கான இல்லமாக மாற்றியுள்ளதை பிரையன் தம்பதி புகைப்படங்களாக பதிவு செய்து பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.
கனடா எப்போதும் அகதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடு என குறிப்பிட்டுள்ள பிரையன், உக்ரைன் மக்கள் அவர்கள் விரும்பும் வரையில் தங்கள் விடுதியில் தங்கிக்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.