அவசர நிலை பிரகடனம் ரத்து? கனடா பிரதமரின் அதிரடி அறிவிப்பு!
கனடாவில் அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ (Justin Trudeau) அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லொறி சாரதிகளும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது.
இதேவேளை, அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வரும் லொறி சாரதிகள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்று கனடா அரசு தெரிவித்தது. மேலும், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது.
இதனைத்தொடர்ந்து கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லொறி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா - அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர்.
லொறிகள் பாலத்தில் நிறுத்தப்பட்டதால் கனடா - அமெரிக்கா இடையேயான போக்குவரத்து தடைபட்டது. இந்த சூழலில் லொறி சாரதிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் கனடாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து போராட்டக்காரர்களின் லொறிகளையும், அவர்கள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களை பொலிஸார் அப்புறப்படுத்தினர். இதன் மூலம் பல நாட்களாகக் கனடா தலைநகரில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழல் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் கனடாவில் தற்போது லொறி சாரதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுருடோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பி பேசிய அவர்,
“இன்று, நிலைமை இனி அவசரமாக இல்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே, மத்திய அரசு அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தும்” என்று பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.