கனடாவில் ஒரு ஊழியரின் ஆண்டுச் சம்பளத்தை 43 நிமிடங்களில் உழைக்கும் அதிகாரிகள்
கனடாவில் ஒரு ஊழியரின் சராசரி ஆண்டுச் சம்ளத்தை இன்றைய தினம் பணி ஆரம்பித்து 43 நிமிடங்களில் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் உழைத்து முடித்துவிட்டனர் என சுவாரஸ்ய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் பெரு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட அதி உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளினது சம்பளங்கள் வெகு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு பிரதம நிறைவேற்று அதிகாரி போன்ற உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் 14.3 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டுகின்றனர்.
இதேவேளை, சாதாரண தொழிலாளி ஒருவரின் சராசரி ஆண்டுச் சம்பளம் 58800 டொலர்கள் மட்டுமேயாகும்.
இதன்படி, இந்த ஆண்டுக்கான பணி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளின் முதல் மணித்தியாலம் கடக்க முன்னதாகவே (விடுமுறை தினமான திங்கட்கிழமை சம்பளத்துடனான கொடுப்பனவு உட்பட) தொழிலாளி ஒருவரின் ஆண்டுச் சம்பளத்தை உயர் அதிகாரிகள் உழைத்துள்ளனர்.
சாதாரண ஊழியர் ஓருவரின் சம்பளத்தை விடவும் உயர் அதிகாரிகள் 243 மடங்கு சம்பளம் ஈட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் நிறைவேற்று அதிகார தரத்திலான உயர் அதிகாரிகளுக்கும் சாதாரண தொழிலாளர்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளி பல்கிப் பெருகிக்கொண்டே செல்வதாக தெரிவிக்கப்படுக்கின்றது.
கடந்த ஆண்டில் மொன்ட்ரியலை மையமாகக் கொண்ட நிதி நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியான பிலிப் பெயர், 140.7 மில்லியன் டொலர் வருமானமாக ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.