தாய்லாந்து-கம்போடியா இடையிலான முரண்பாடு ; மலேசியாவின் மத்தியஸ்தத்தில் நம்பிக்கை
தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் தங்களது எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க மலேசியாவை மத்தியஸ்தராக ஏற்றுக்கொண்டதாக மலேசிய வெளிவிவகார அமைச்சர் மொஹமத் ஹசன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட பின்னரும், இரு நாடுகளும் பிரச்சனைக்குரிய எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை முன்னெடுப்பதாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் ஆகியோர் இன்று (28) மாலை மலேசியாவில் பேச்சுவார்த்தைக்காக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் வேறு எந்த நாடும் தலையிடக் கூடாது என இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மலேசிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடிய பிரதமர்கள் தமது கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக (26) தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளும் மலேசியாவின் மத்தியஸ்தத்தை ஏற்றாலும், தற்போது வரை எல்லையில் மோதல்கள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.